லக்னோ:உத்தர பிரதேசம் பிரதாப்கர் மாவட்டம் சக்தல் கிராம பள்ளி ஒன்றில், மாணவர்களுக்கு கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 12), இரும்பு சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதை உட்கொண்ட மாணவர்களுக்கு படிப்படியாக உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை (ஜூலை 12 ) மாத்திரைகள் வழங்கப்பட்ட நிலையில், அடுத்த நாள் (ஜூலை 13) சிலருக்கு கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து, நேற்று (ஜூலை 15) காலை வரை குறைந்தது 30 குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட அனைவரும் 5 முதல் 11 வயது உடைய குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.
மொத்தம் 49 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமத்தினர் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தாசில்தார், கிராம தலைவர் உள்பட அதிகாரிகள் சக்தல் கிராமத்தின் சுஹாக்புரா பகுதிக்கு விரைந்து ஆய்வு மேற்கொண்டனர்.