திருவனந்தபுரம்: கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ், கொசுக்கள் மற்றும் பறவைகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வகை வைரஸ்கள் நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாது என்றும், ரத்த தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றின் மூலம் பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
தலைவலி, காய்ச்சல், தசைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும். திருச்சூர் மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 47 வயதான நபருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டது.
அவருக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தென் மாநிலங்களில், வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது எனத் தெரிகிறது.