உத்தரகாசி:உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி மாவட்டத்தில் மலையைக் குடைந்து சுரங்கம் அமைத்து தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த சில்க்யாரா சுரங்கப்பாதையில் கடந்த நவம்பர் 12ஆம் தீபாவளி தினத்தன்று நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சுரங்கப்பாதையில் பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இதனையடுத்து பேரிடர் மீட்பு படையினர், நெடுஞ்சாலைத்துறையினர் மற்றும் பல்வேறு குழுக்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் நிபுணர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்பதற்கு பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன.
சுரங்கத்தில் அதிகளவு பாறைகள் சரிந்து விழுந்துள்ளதால், அதனை அகற்றி தொழிலாளர்களை மீட்க அதிக காலம் ஆகும் என்பதால் சுரங்கத்தில் செங்குத்தாக துளையிடுவது, பக்கவாட்டில் துளையிடுவது, ஆள் நுழையக்கூடிய வகையில் துளையிட்டு பைப் லைன் அமைப்பது என பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு மீட்டு பணிகள் நடைபெற்று வந்தன.
மேலும், சுரங்கத்தில் சரிந்து விழுந்த பாறைகளை அகற்றும் பணியும் ஒருபுறம் நடந்து வருகிறது. சுரங்கத்தின் மறுபுறத்தில் இருந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. வெடிகள் வைத்து தகர்ப்பது ஆபத்தான பணி என்பதால் அந்த பணி கிடப்பில் போடப்பட்டு உள்ளது.
மேலும், ஆகர் இயந்திரம் மூலம் துளையிட்டு 3 அடி அகலத்திலான குழாய்கள் அமைக்கப்பட்டு அதன் வழியாக உள்ளே சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டிய போது ஆகர் இயந்திரத்தின் பிளேசி உடைந்து உள்ளே சிக்கிக் கொண்டது. இதனால் தொழிலாளர்கள் மீட்கப்படுவது மேலும் தள்ளி போனது.
கடந்த 16 நாட்களாக சிக்கியுள்ள 41 தொழிலாளர்களைக் காப்பாற்ற பல திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளனர். ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணியில் தடை ஏற்பட்டதால் அடுத்தக்கட்டமாக சுரங்கத்தின் மேலிருந்து துளையிடும் பணியை சட்லஜ் ஜல் வித்யுத் நிகாம் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் லிமிடெட் (NHIDCL) நிர்வாக இயக்குனர் மஹ்மூத் அகமது, “நாங்கள் சுமார் 19.2 மீட்டர் தோண்டும் பணியை முடித்துவிட்டோம். நவம்பர் 30ஆம் தேதிக்குள் 86 மீட்டர் துளையிட வேண்டும். துளையிடும் இடத்தில் நாங்கள் புவியியல் ஆய்வுகளை மேற்கொண்ட போது அதில் எந்த தடங்கலும் தெரியவில்லை. இதனால் சரியான நேரத்தில் பணி முடிவடையும்” எனத் தெரிவித்தார்.