உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சில்க்யாரா மற்றும் தண்டல்கான் இடையே சுரங்கம் அமைக்கும் பணியின்போது, சுரங்கத்தில் சரிவு ஏற்பட்டது. திடீரென ஏற்பட்ட இந்த சரிவினால், சுரங்கம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த 40 தொழிலாளர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக் கொண்டனர்.
தீபாவளி அன்று காலை 9 மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்ட நிலையில், சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். மேலும், சுரங்கத்தின் உள்ளே சிக்கிக் கொண்ட தொழிலாளர்கள் சுவாசிப்பதற்காக குழாய் மூலம் ஆக்சிஜன் வழங்கப்பட்டது. மேலும், அவர்களுக்குத் தேவையான தண்ணீர், உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.
பிரம்மகால்-யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுமார் நான்கரை கிலோ மீட்டர் நீளத்திற்கு சுரங்கப்பாதை அமைக்கப்பட்டு வரும் நிலையில், அதில் 35 மீட்டர் நீளத்திற்கு சுரங்கத்தின் சுவர்களில் சரிவு ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணி நடைபெற்று வந்தபோது சுரங்கத்தில் மீண்டும் சரிவு ஏற்பட்டதால், மீட்புப் பணியில் சுனக்கம் ஏற்பட்டது. பின்னர், அதிநவீன இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, மீட்புப் பணி முடுக்கி விடப்பட்டது. இந்நிலையில், விபத்து ஏற்பட்டு ஐந்தாவது நாளாக இன்றும் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
தொழிலாளர்களை விரைவாக மீட்பதற்காக விமானப்படை விமானங்கள் மூலம் அதிநவீன இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு மீட்புப்பணி நடைபெற்று வருகிறது என தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக லிமிடெட் (NHIDCL) சுரங்கப்பாதை திட்ட இயக்குனர் அன்ஷு மணீஷ் குல்கோ தெரிவித்துள்ளார்.