ஹைதராபாத்:ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம் மற்றும் தெலங்கானா ஆகிய 5 மாநிலங்களில் அண்மையில் சட்டமன்ற தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. இந்த நிலையில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய நான்கு மாநிலத்திற்கு நாளை (டிச. 3) வாக்கு எண்ணும் பணி தொடங்க உள்ளது.
மிசோரம் மாநிலத்தில் மட்டும் டிசம்பர் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என இந்தியத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தெலங்கானா:தெலங்கானாவில் உள்ள 119 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 30ஆம் தேதி நடைபெற்றது. மாநிலத்தின் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 60 இடங்களை கைப்பற்றியாக வேண்டும். தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச. 3) நடைபெற உள்ளது. இதற்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தரப்பில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
தெலங்கானா சட்டமன்றத் தேர்தல் வாக்குகள் எண்ணுவதற்காக மாநிலம் முழுவதும் 49 மையங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் ஹைதராபாத்தில் மட்டும் 14 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு தொகுதிகளுக்கும் 14 மேஜைகள் மற்றும் தபால் ஓட்டுகள் எண்ணுவதற்கு 1 மேஜை அமைக்கப்பட்டுள்ளது.
500 வாக்கு சவாடிகள் கொண்ட 6 தொகுதிகளுக்கு மட்டும் 28 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக மாநிலம் முழுவதும் 1,766 மேஜைகள் இவிஎம் வாக்குகள் எண்ணவும், 131 மேஜைகள் தபால் வாக்குகள் எண்ணவும் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை (டிச. 3) காலை சரியாக 8.00 மணிக்கு முதலாவதாக தபால் ஓட்டுகள் எண்ணப்படும் என்றும் அதன் பின் ஒவ்வொரு சுற்றாக வாக்குகள் எண்ணப்படும் என இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய பிரதேசம்:230 தொகுதிகளைக் கொண்ட மத்திய பிரதேசத்திற்குக் கடந்த நவம்பர் 17ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெற்றது. மொத்தமாக மத்திய பிரதேசத்தில் 77.15% வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த நிலையில் நாளை (டிச. 3) வாக்கு எண்ணும் பணியானது மாநிலம் முழுவதும் காலை 8 மணிக்குத் தொடங்குகிறது.