புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தமிழ்நாடு உள்ளிட்டப் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைப் பெற்று செல்கின்றனர். இந்த மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜிப்மர் இயக்குநர் ராகேஷ் அகர்வால், ஜிப்மர் ஊழியர்களுக்கு உத்தரவு ஒன்றைப் பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவில், அலுவல் மற்றும் வருகைப்பதிவு ஆகியவைகளில் கட்டாயம் இந்திமொழி இடம்பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த உத்தரவிற்கு, பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்புகளைத்தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் இன்று (மே 09) அம்மாநில திமுகவினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில், ஜிப்மர் மருத்துவமனையை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்திய அரசையும் ஜிப்மர் இயக்குநரையும் கண்டித்து முழக்கங்களை எழுப்பினார்கள்.
மேலும், சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினருடன் சமாதான பேச்சு நடத்தினர். இதை ஏற்க மறுத்த திமுகவினர் போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் ஜிப்மர் மருத்துவமனை முன்பு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.