ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் கோடா மாவட்டத்தில் கடந்த இரண்டு நாள்களாக ஜே.கே. லோன் மருத்துவமனையில் ஒன்பது பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். இது குறித்து விசாரிக்க நான்கு பேர் கொண்ட குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்தக் குழுவில், மருத்துவக் கல்வித் துறை ஆணையர் சிவாங்கி ஸ்வார்ணாகர், ராஜஸ்தான் மருத்துவ சேவைகள் கார்ப்பரேஷன் இயக்குநர் லக்ஷ்மண் சிங், குழந்தை மருத்துவத் துறையின் கூடுதல் முதல்வர் அமர்ஜீத் மேத்தா, எஸ்எம்எஸ் மருத்துவக் கல்லூரியின் மருத்துவர் ராம்பாபு ஷர்மா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தக் குழு அமைக்கப்பட்டதையடுத்து குழுவிலுள்ள நபர்கள் மருத்துவமனை வளாகத்தை ஆய்வு செய்தனர். உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்களிடம் இவர்கள் முதலில் விசாரணை நடத்தவுள்ளனர். பின்னர் மருத்துவமனை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உள்ளனர்.