இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் வேகமாக அதிகரித்து வருகிறது. தினந்தோறும் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டுகிறது. வைரஸ் பரவலைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மத்திய, மாநில அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கரோனா பரவலுக்குத் தலைநகர் டெல்லியும் விதிவிலக்கு அல்ல. தினந்தோறும் டெல்லியில் 7ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் 35 மருத்துவர்களுக்கு, 50 மருத்துவ ஊழியர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை (ஏப்.10) முதல் அவசரமான அறுவை சிகிச்சைகள் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.