உலகின் மிகப்பெரிய எண்ணிக்கையில் தடுப்பூசி போடும் திட்டத்தை வரும் 16 ஆம் தேதியன்று மத்திய அரசு தொடங்கவுள்ளது. இந்நிலையில், கரோனா தடுப்பூசி விநியோகம் தொடர்பாக மாநில / யூனியன் பிரதேசங்களின் முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி, காணொளி வாயிலாக இன்று (ஜன.11) கலந்துரையாடினார்.
இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், “உலகளாவிய பெருந்தொற்று நோயான கரோனா வைரஸுக்கு எதிரான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொண்டு, பாதிப்பை வெகுவாகக் குறைத்திருக்கிறோம். உலகின் வேறெந்த பகுதிகளிலும் இல்லாத வகையில், நமது அரசு முழு உணர்திறனுடன் முடிவெடுத்து துரிதமாக செயலாற்றியது.
கோவிட்-19க்கு எதிரான போராட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு இடையிலான சரியான உரையாடல் பெருமளவில் உதவியது. உலக நாடுகளுக்கு நமது நாட்டின் கூட்டாட்சி முறையை வெளிப்படுத்த இந்த நெருக்கடியான சூழல் நமக்கு வாய்ப்பளித்துள்ளது. சர்வதேச அளவில் முன்மாதிரியாக நாம் பணியாற்றியுள்ளோம். நெருக்கடியான நேரத்தில் ஒற்றுமையாக நின்றோம், அதன் மூலமக மக்களின் நலனைப் பாதுகாத்தோம் என்பதை உணர்ந்து திருப்தி அடைகிறேன்.
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்பான இரண்டு கரோனா தடுப்பூசிகள், விரைவில் பொதுமக்களுக்கு விலையில்லாமல் வழங்கப்படவுள்ளது. அதற்காக தான் கரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு விரைந்து ஒப்புதல் வழங்கியுள்ளது. தடுப்பூசி பயன்பாட்டிற்கு வந்தால் அதனை பொதுமக்களுக்கு எவ்வாறு அளிப்பது என நாடு முழுவதும் ஒத்திகை பார்க்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கோவிட்-19 தடுப்பூசி நடைமுறைக்கும் வரும் அடுத்த சில மாதங்களில் 30 கோடி மக்களுக்கு போடப்படும். அதனை இலக்காக வைத்தே செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.