பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று முடிந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுளை அடுத்து கடந்த மாதம் 30ஆம் தேதி கல்புர்கியில் காங்கிரஸ் மற்றும் பாஜகவினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பெண் மற்றும் அவருடைய மூன்று வயது பெண் குழந்தையையும் கைது செய்து ஜவாரி காவல் நிலையத்தில் அடைத்தனர். இவர் மீது பிணையில் வெளிவர இயலாத வண்ணம் வழக்குப் பதிவும் செய்துள்ளனர்.
இந்நிலையில், ஜனவரி 2ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்ட குழந்தை உடல்நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, காவலர்கள் இந்த குழந்தையை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். ஆனால், அங்கு குழந்தை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தது.
இந்தச் சம்பவம் குறித்து அறிந்த காங்கிரஸ் கட்சியினரும், மக்களும் காவலர்களை கண்டித்தும், குழந்தை இறந்த சம்பவத்தைக் கண்டித்தும் தொடர்ந்து ஆர்பாட்டம் நடத்தி வந்தனர்.
அப்போது, இந்த விவகாரத்தில் காவலர்கள் முறையான விசாரணையை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். இச்சம்பவம் குறித்து பேசிய ஜவாரி காங்கிரஸ் எம்எல்ஏ அஜய் சிங், "கைகலப்பில் ஈடுபட்ட பாஜகவினர் மீது சாதரண வழக்குப் பதிவும், காங்கிரஸ் கட்சியினர் மீது பிணையில் வர இயலாத அளவில் வழக்குப் பதிவு செய்ததாகவும் குற்றம் சாட்டினார்.
காவல்துறையின் இந்த நடவடிக்கையால் மூன்று வயது குழந்தை உயிரிழந்துள்ளது. இந்தச் சம்பவத்திற்கு முழுக்க முழுக்க காவல்துறையினரே பொறுப்பு. இந்த விவகாரத்தில் முறையான விசாரணை அவசியம்" என்றார்.
இதையும் படிங்க: 'இடதுசாரி சித்தாந்தமே சரியானது'- ஆர்யா ராஜேந்திரன் சிறப்பு பேட்டி