தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 2, 2020, 6:38 PM IST

ETV Bharat / bharat

பெங்களூரு கலவரம்: முக்கியக் குற்றவாளியைப் பிடிக்கச் சிறப்புக் குழு

பெங்களூரு: பெங்களூரு கலவரத்தில் முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் மேயர் சம்பத் ராஜை பிடிக்க மத்திய குற்றப்பிரிவு சிறப்புக் குழுவை அமைத்துள்ளது.

பெங்களூரு
பெங்களூரு

பெங்களூருவில் ஆகஸ்ட் 11ஆம் தேதி இரவு காங்கிரஸ் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்தியின் உறவினர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட கருத்தை கண்டித்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் எம்எல்ஏ வீடு சூறையாடப்பட்டது மட்டுமின்றி டி.ஜே., ஹள்ளி, கே.ஜி., ஹள்ளி காவல் நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இந்தக் கலவரத்தின்போது காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்தனர்‌.

இந்தக் கலவரத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நபர்களைக் காவல் துறையினர் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர். கலவரத்திற்கு காரணமான முக்கிய நபரை காவல் துறையினர் தேடிவந்த நிலையில், இவ்வழக்கின் விசாரணை சமீபத்தில் தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதையடுத்து, களத்திலிறங்கிய என்ஐஏ பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி ஏர்கன், கூர்மையான ஆயுதங்கள், இரும்பு தடிகள் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்‌.

கலவரம் குறித்து மத்திய குற்றப்பிரிவு காவல் துறை சமர்ப்பித்த 400 பக்கம் அறிக்கையில், 60 நபர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, முன்னாள் மேயர் சம்பத் ராஜ், முன்னாள் கார்பரேட்டர் ஜாகிர் உசேன் ஆகியோரின் பெயர்கள் கலவத்திற்கு முக்கியமான நபர்கள் பட்டியலில் இடம்பெற்றிருந்தது. விசாரணையில் இந்தக் கலவரம் எம்.எல்.ஏ. சீனிவாச மூர்த்திக்கு எதிரான காங்கிரசின் அரசியல் விரோதமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கலவரத்தின் குற்றவாளிகளைக் கைதுசெய்ய சிசிபி தரப்பில் தனிக்குழு ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மேயர் சம்பத் ராஜ், கரோனா தொற்றின் காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சைக்கு பின் விடுவிக்கப்பட்டார். சம்பத் ராஜை தேடி காவல் துறையினர் சென்ற போதுதான் அவர் தலைமறைவாகியுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து, அவரைப் பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.

மத்தியக் குற்றப்பிரிவு காவல் சம்பத் ராஜூக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில், அவரைக் கைதுசெய்ய மூன்று சிறப்புக் குழுவை அமைத்துள்ளது. கேரளா மற்றும் பெங்களூருவில் சிறப்பு குழு தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details