மும்பை: மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவின் அணியில் மேலும் 3 எம்.எல்.ஏக்கள் இணைந்துள்ளனர். முன்னதாக நேற்று(ஜூன் 22) நான்கு எம்.எல்.ஏக்கள் இணைந்த நிலையில் மேலும் 3 எம்.எல்.ஏக்கள் தாவியுள்ளனர். இத்தோடு கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 எம்.எல்.ஏக்கள் ஷிண்டேவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் சிவசேனா கட்சியின் ஆட்சியில் முதலமைச்சராக உத்தவ் தாக்கரே இருக்கிறார். ஷிண்டேவின் ஆதரவு எம்.எல்.ஏக்கள் கையெழுத்திட்ட தீர்மானம் ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கு அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தனது அதிகாரப்பூர்வ இல்லமான 'வர்ஷா'விலிருந்து புதன்கிழமை(ஜூன்22) தனது உறவினர்களுடன் வெளியேறினார். எம்.எல்.ஏக்கள் மும்பைக்குத் திரும்பி கோரிக்கையை முன்வைத்தால் ராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக அவர் தெரிவித்தார். உத்தவ் தாக்ரே அதிகாரப்பூர்வ இல்லமான 'வர்ஷா பங்களா'விலிருந்து தனது குடும்பத்தினருடன் புறப்பட்டபோது சிவசேனா தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அங்கு கூடி அவருக்கு ஆதரவாக முழக்கங்களை எழுப்பினர்.