இது தொடர்பாக மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியா முழுவதும் உள்ள நீதிமன்றங்களை கணினி மயமாக்கும் திட்டமான ‘இ-கோர்ட்’ திட்டம் முழுவீச்சில் நடைபெற்றுவருகிறது. இதுவரை நாடு முழுவதும் 2,927 நீதிமன்ற வளாகங்கள் கணினி மயமாக்கும் ‘இ-கோர்ட்ஸ்’ திட்டத்தின் கீழ் அதிவேக இணைய சேவையில் பிணைக்கப்பட்டுள்ளன.
பொது மக்களுக்கு நீதிமன்றங்களை எளிதில் அணுகும் வாய்ப்பை வழங்க நீதித்துறை, இந்திய உச்ச நீதிமன்றத்தின் இ-கமிட்டியுடன் சேர்ந்து டிஜிட்டல் பாதையில் ஒரு பெரிய பாய்ச்சலை மேற்கொண்டது.
இந்திய உச்ச நீதிமன்றத்தின் இ-கமிட்டி மற்றும் நீதித்துறையின் வழிக்காட்டுதலின் கீழ், உலகின் அதிநவீன தொழிற்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி தேசம் முழுவதும் அமைந்துள்ள 2,992 மையங்களின் உதவியோடு நெட்வொர்க் (டபிள்யூ.ஏ.என்.,), ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (ஒ.எஃப்சி.,), ரேடியோ அதிர்வெண் (ஆர்.எஃப்.,), துளை முனையம் (வி.எஸ்.ஏ.டி.,) போன்ற பல்வேறு வகையான இணைப்பு முறைகள் வழியே இணைக்கப்பட்டுள்ளன. பி.எஸ்.என்.எல் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களுடனான தொடர்ச்சியான கலந்துரையாடல்கள், ஒருங்கிணைப்புக் கூட்டங்கள் மூலமாக இதனை சாத்தியப்படுத்தியுள்ளோம்.
கடந்த 2007ஆம் ஆண்டு முதல் 2015 ஆம் ஆண்டு வரையில் இ-கோர்ட்ஸ் முதல் கட்டம் திட்டத்தின் கீழ் 14,249 மாவட்ட மற்றும் துணை நீதிமன்றங்கள் கணினிமயமாக்குவதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இரண்டாம் கட்டம் திட்டத்தின் கீழ், 16,845 நீதிமன்றங்களாக அது உயர்த்தப்பட்டது.