டெல்லி:தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் வரும் 9 மற்றும் 10-ஆம் தேதிகளில் நடைபெற உள்ள ஜி20 மாநாட்டின் முகப்பில் வைப்பதற்காக, மத்திய அரசின் இந்திய கலாச்சாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் சார்பில் உலகின் பெரிய நடராஜர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலைகளில் ஒன்றான இதனை, தமிழகத்தில் கும்பகோணம் அடுத்த சுவாமிமலையில் உள்ள தேவ சேனாதிபதி சிற்பக்கூட ஸ்தபதிகளான தேவ.ராதாகிருஷ்ணன், தேவ.ஸ்ரீ.P.கண்டன், மற்றும் தேவ.சுவாமிநாதன் சகோதரர்கள் மற்றும் சக ஸ்தபதிகளின் உதவியோடு சுமார் 6 மாத கால உழைப்பில் இச்சிலையை வடிவமைத்துள்ளனர்.
இந்த உலகின் மிகப்பெரிய நடராஜர் சிலையின் 75 சதவீத பணிகள் நிறைவு பெற்று இருந்த நிலையில், இந்திரா காந்தி தேசிய கலை மையத் தலைவர் ஆச்சால் பாண்டியா தலைமையிலான குழு, மிகப்பெரிய கனரக வாகனத்தில் சாலை மார்க்கமாகப் டெல்லி கொண்டு சென்றனர்.
இதையும் படிங்க: G20 மாநாடு பாதுகாப்புக்காக டெல்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மூடல்!
மத்திய அரசின் கீழ் இயங்கும் கலாச்சார துறையின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த சிலை, அமெரிக்க, ரஷ்யா, ஜப்பான், ஜெர்மனி உள்ளிட்ட பல வெளிநாடுகளின் முக்கிய தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளதால் பாதுகாப்புப் பணிகளின் கருதி, இச்சிலை பணிகள் முழுமையாக நிறைவடையும் முன்னரே புதுடெல்லி கொண்டு செல்லப்பட்டது.
சிலையின் மீதம் இருந்த 25 சதவீத பணிகளை சுவாமி மலையிலிருந்து 15 ஸ்தபதிகள், புதுடெல்லிக்குச் சென்று, அந்தச் சிலையை முழுமையாக வடிவமைத்தனர். இந்த பிரம்மாண்ட சிலை 10 கோடி ரூபாய் செலவில், வெண்கலத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சிலை, ஜி20 மாநாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு இந்திய நாட்டின் கலாச்சாரத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
பிரகதி மைதானத்தில் நடக்க விருக்கும் ஜி20 மாநாட்டின் ஏற்பாடுகள் முழு வேகத்தில் நடைபெற்று வரும் நிலையில், இந்த பிரம்மாண்ட நடராஜர் சிலை மாநாடு நுழைவாயிலில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனை பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படுகிறதா ‘பாரத்’ மசோதா?