நாக்பூர் (மகாராஷ்டிரா): கடந்த இரண்டு நாட்களாக மகாராஷ்டிரா மாநில அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. நான்டெட்டில் உள்ள அரசு மருத்துவமனையில் மூன்று நாட்களில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். சத்ரபதி சம்பாஜிநகரின் காதி மருத்துவமனையில் 24 மணி நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். தொடர்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அதிகளவில் உயிரிழந்ததால் அம்மாநில மருத்துவமனைகளில் போதுமான அளவு மருந்துகள் கையிறுப்பு உள்ளதா என்ற சந்தேகம் எழுந்தது.
இந்நிலையில், தற்போது நாக்பூர் அரசு மருத்துவமனையிலும் நோயாளிகள் உயிரிழந்த செய்தி வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாக்பூரில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளிலும் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்களா அல்லது வேறு ஏதேனும் காரணங்களா என பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்துள்ளது.
நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் இந்திரா காந்தி கல்லூரி (mayo) மருத்துவமனைகளில் கடந்த 24 மணி நேரத்தில் 25 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். நாக்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் 16 நோயாளிகளும், இந்திராகாந்தி மருத்துவமனையில் 9 நோயாளிகளும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்த நோயாளிகளில் பிறந்த குழந்தைகள் முதல் பல்வேறு வயதினரும் அடங்குவர். மேலும், தனியார் மருத்துவமனைகளில் அவசர பிரிவில் இருந்தவர்களும், வென்டிலேட்டர்களில் இருந்த நோயாளிகளும் அரசு மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்படுவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.