டெல்லி: கடந்த அக்டோபர் 7ஆம் தேதி முதல் இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையிலான போர் தொடங்கியது. நாளுக்கு நாள் வலுவடைந்த இந்த போரின் காரணமாக, எல்லைப் பகுதியான காசா நகரம் பெருமளவு சேதம் அடைந்து உள்ளது. இதன் காரணமாக அங்கு வசித்த மக்கள் தங்கள் வீடு, உடமைகள் மற்றும் உறவினர்களை இழந்து உள்ளனர். மேலும், பல்வேறு தற்காலிக நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு அவர்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த போரில் இதுவரை 1,300க்கும் மேற்பட்ட இஸ்ரேல் மக்கள் மற்றும் 1,530க்கும் மேற்பட்ட காசா நகர மக்கள் உயிரிழந்து உள்ளனர். அதேநேரம், 1,500க்கும் மேற்பட்ட ஹமாஸ் குழுவினரை கொன்று உள்ளதாக இஸ்ரேல் தரப்பு தெரிவித்து உள்ளது. இதனிடையே, இஸ்ரேலில் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியானது, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் மற்றும் இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் ஆகியவற்றின் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது.
இதன் விளைவாக, நேற்றைய முன்தினம் (அக்.12) இஸ்ரேலில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வகையிலான ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதனையடுத்து, அன்றைய நாளின் இரவே பென் குரியோன் விமான நிலையத்தில் இருந்து 1 குழந்தை உள்பட 212 இந்தியர்கள் சிறப்பு விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட்டனர். இவ்வாறு வந்தவர்களை, டெல்லி விமான நிலையத்தில் வைத்து மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் வரவேற்றார்.
இந்த நிலையில், நேற்று (அக்.13) இரவு இஸ்ரேலின் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து 2 குழந்தைகள் உள்பட 235 இந்தியர்கள் இரண்டாவது குழுவாக இந்தியாவுக்கு புறப்பட்டனர். இவ்வாறு வந்த இவர்களை வரவேற்பதற்காக, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக இணை அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் சிங் டெல்லி விமான நிலையத்தில் காத்திருந்தார். இதனையடுத்து, டெல்லி விமான நிலையம் வந்தடைந்த 235 இந்தியர்களை மத்திய இணை அமைச்சர் மற்றும் தமிழ்நாடு உள்பட ஒவ்வொரு மாநிலத்தின் பிரதிநிதிகளும் வரவேற்றனர்.
மேலும், இது தொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டு உள்ள X பதிவில், “இரண்டாவது குழுவாக டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து 235 இந்தியர்கள் புறப்பட்டு உள்ளனர்” என தெரிவித்துள்ளார். அதேபோல், இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்ட X சமூக வலைத்தளப் பதிவில், “ஆபரேஷன் அஜய் திட்டத்தின் இரண்டாவது விமானம், 235 இந்தியர்கள் உடன் டெல் அவிவ் விமான நிலையத்தில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டது.
இந்த இரண்டாவது விமானம் உள்ளூர் நேரப்படி இரவு 11.02க்குப் புறப்பட்டது. இந்த செயல்பாடு நாளையும் தொடரும்” என குறிப்பிட்டு உள்ளது. மேலும், தாயகம் திரும்புவதற்காக விண்ணப்பித்த அனைவருக்கும் வகைப்படுத்தப்பட்டு, மின்னஞ்சல்களை இந்திய தூதரகம் அனுப்பி வருகிறது. மேலும், இஸ்ரேலில் கல்வி, ஐடி, வைர வியாபாரம் என பல பிரிவுகளில் 18,000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:தீவிரமடையும் இஸ்ரேல் - ஹமாஸ் சண்டை.. இஸ்ரேல் வாழ் இந்தியர் ஈடிவி பாரத்திற்கு பகிர்ந்த பரபரப்பு தகவல்!