டெல்லி :இந்திய தண்டனைச் சட்டத்தில், தேசத் துரோக சட்டம் தொடர வேண்டும் என்று, மத்திய சட்டத் துறை அமைச்சக்கத்திற்கு இந்திய சட்ட ஆணையம் பரிந்துரை செய்து உள்ளது.
நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் கடந்த நிலையில், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் கொண்டு வரப்பட்ட தேச விரோத சட்டம் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த சட்டத்தால் கருத்தியல் துறையில் இருக்கும் பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்டோர் பாதிப்படைவதாகக் கூறி, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124A என்ற தேச துரோக சட்டப் பிரிவை நீக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசுக்கு கடந்த 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்த வழக்குத் தொடர்பாக மத்திய அரசு பரிசீலனை மேற்கொள்ளும் வரை, இந்திய தண்டனைச் சட்டத்தில் உள்ள 124 A என்ற தேசத் துரோக சட்டப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஏற்கனவே, தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருப்பவர்கள் பிணை கோரலாம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. இதற்கு மத்திய அரசு தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, தேசத்துரோக சட்டப் பிரிவுக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்து உள்ளது.
அதில், இந்திய தண்டனைச் சட்டத்தின் 124A சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வதற்கான செயல்முறையை மத்திய அரசு துவக்கி உள்ளதாகவும் தேசத் துரோக சட்டப் பிரிவை மறுபரிசீலனை செய்வது தொடர்பான ஆலோசனை செயல்முறை அடுத்தகட்ட நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.