கராச்சி : பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ரயில் தடம்புரண்ட விபத்தில் 22 பேர் உயிரிழந்த நிலையில், நுற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து ராவல்பிண்டி நோக்கி ஹசாரா விரைவி ரயில் சென்று கொண்டு இருந்தது. சர்ஹரி ரயில் நிலையம் அருகே விரைவு ரயில் திடீரென தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த கோர விபத்தில் ரயிலில் பயணித்த 22 பேர் சடலமாக மீட்கப்பட்டு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், விபத்தில் சிக்கிய நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. தடம்புரண்ட பத்து பெட்டிகளில் சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மீட்பு குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
மேலும் விபத்துக்கான காரணம் குறித்து விரிவான விசாரணை நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மீட்பு படையினருடன் சேர்ந்து ரயில்வே ஊழியர்கள் உள்ளிட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். மீட்புக் குழுவினருக்கு துணையாக பாகிஸ்தான் ராணுவமும் களமிறக்கப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் முயற்சியில் பாகிஸ்தான் ராணுவத்தினர் ஈடுபட்டு உள்ளனர். மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது. ஈடுபாடுகளில் சிக்கிக் கொண்ட சடலங்கள் மீட்கப்பட்டு உள்ள நிலையில் அடையாளம் காணுவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளதாக அதிகாரிகள் கூறி உள்ளனர்.
சிந்து மாகாணத்தில் ரயில் விபத்துகள் என்பது தொடர் கதையாக காணப்படுகிறது. பாகிஸ்தானில் நடந்த மோசமான ரயில் விபத்துகளில் பெரும்பாலனாவை இந்த சிந்து மாகாணத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1990 ஆம் ஆண்டு சுக்கூர் அருகே நடந்த ரயில் விபத்தில் 307 பேர் கொல்லப்பட்டனர்.
அந்நாட்டில் நேர்ந்த மிக மோசமான ரயில் விபத்தாக இது கூறப்பட்டது. அதேபோல் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் தேதி, சிந்து மாகாணத்தில் உள்ள கோட்கியில் இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் மோதியதில் 32 பயணிகள் கொல்லப்பட்டனர். மேலும் 64க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.
இதற்கு முன் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில், சிந்து மாகாணத்தில் உள்ள ரோஹ்ரி நிலையம் அருகே பயணிகள் பேருந்து மீது ரயில் மோதியதில் 19 பேர் கொல்லப்பட்டனர். பல ஆண்டுகளாக பாகிஸ்தானின் ரயில்வே துறையை மேம்படுத்த அரசுகள் முயன்று வரும் நிலையில், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களால் அது நிறைவேறாமல் இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :ராகுலுக்கு எம்பி பதவியை மீட்டுத் தர தாமதம் - நம்பிக்கையில்லா தீர்மான விவாதத்தில் பங்கேற்பதை தடுக்க சதி என குற்றச்சாட்டு!