பூபாலபள்ளி(தெலங்கானா):தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர், புர்ரா லஸ்யா. தன் வாழ்நாள் சாதனை குறித்து அவரே விவரிக்கிறார்.
புர்ரா லஸ்யா கூறியதாவது, "எனது அப்பா புர்ரா ரமேஷ். பல்கலைக்கழக வாலிபால் விளையாட்டு வீரர். அம்மா சுனிதா தேசிய தடகள வீராங்கனை. இவர்களால் தான் விளையாட்டுத்துறையில் தனித்து விளங்கி சாதனைப் படைக்க வேண்டும் என்ற எண்ணம் எனது ரத்தத்தில் ஊறியதற்கு காரணம் எனக் கூறலாம்.
விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள பெற்றோர் என்னை ஊக்குவித்தார்கள். சிறு வயதில் கிரிக்கெட் மீது அதீத ஆர்வம். பின்னாட்களில் அதுவே காதலாகவும் மாறத் தொடங்கியது. சிறு பெண்ணாக இருக்கும்போது எனது சகோதரர் மற்றும் அவனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவேன்.
மேலும் உலகக்கோப்பை கிரிக்கெடை ஒருமுறை பார்த்தபோது, இனி நமக்கு வாழ்வில் கிரிக்கெட் மட்டும்தான் என முடிவுசெய்தேன். கிரிக்கெட் விளையாட்டில் வீரர்களுக்கு கிடைக்கும் புகழ் மற்றும் கைத்தட்டல் என்னையும் அந்த விளையாட்டிற்குள் இழுத்துச்சென்றது. அதனால், கிரிக்கெட் மீது அளவு கடந்த அன்பை வளர்த்துக் கொண்டு அதிகம் கற்கத் தொடங்கினேன்.
கிரிக்கெட்டில் எனது ஆர்வத்தை கண்ட அம்மா என்னை ஊக்குவிக்கத் தொடங்கினார்கள். அப்பா மாவட்ட நூலகத்தின் தலைவர் மற்றும் அம்மா சுனிதா மாவட்ட இளைஞர் விளையாட்டுத்துறை அதிகாரியாக இருந்ததால் கிரிக்கெட் குறித்து அதிகம் கற்றுக்கொள்ள உதவியாக இருந்தது.
டேனியல், ராம்பாட்டீல், வி.வி.எஸ். லஷ்மண் ஆகியோரின் கிரிக்கெட் அகாடமிகளில் ஆரம்பக்கட்ட பயிற்சிகளை நிறைவு செய்தேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான மாநில அணியில் ஆல்-ரவுண்டர் வாய்ப்பு கிடைத்தது. விளையாடி எண்ணை நிரூபித்தேன்.
நாம் கற்றுக்கொண்டதை நால்வருக்கும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது எனது சித்தாந்தம். அதன்படி வாழ்ந்து வருகிறேன். அணியில் இணையும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு விளையாட்டு குறித்து கற்றுக்கொடுப்பேன். எனது ஆர்வத்தை கண்ட பயிற்சியாளர், நேரம் கிடைக்கும்போதெல்லாம் எனக்கு கற்றுக்கொடுத்தார்.