ஹைதராபாத்:ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே 3 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. விபத்து நடந்து 48 மணி நேரத்துக்கு மேலாகியுள்ள நிலையில், தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. எனினும் விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே நிர்வாகம் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை.
இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மத்திய கணக்காய்வு மற்றும் தணிக்கை துறை (CAG) அறிக்கையில், ரயில் விபத்துக்களுக்கு பிறகு நடைபெறும் ஆய்வுக் குறைபாடுகள் முக்கிய காரணமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பான பணியில் ஆள் பற்றாக்குறை இருப்பதும் மற்றொரு காரணம் என கூறப்பட்டது.
அதேபோல் சிஏஜி அறிக்கை ரயில்வே நிர்வாகத்துக்கு 2 பரிந்துரைகளை அளித்தது. விபத்து தொடர்பாக நடத்தப்படும் விசாரணையை தீவிரமாக உறுதி செய்வதுடன், உரிய கால அவகாசத்தை நியமிக்க வேண்டும் என்றும், தண்டவாள பராமரிப்பு மற்றும் நவீன தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என அறிவுறுத்தியது.
ரயில்வே நிர்வாகத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்த சிஏஜி சுட்டிக்காட்டிய குறைபாடுகள் விவரம் வருமாறு:
* டிராக் ரெக்கார்டிங் கார்கள் மூலம் ரயில் தண்டவாளத்தின் வடிவியல் மற்றும் கட்டமைப்பு நிலைகளை ஆய்வு செய்யும் பணிகளில் 30 - 100 சதவீதம் வரை குறைபாடு உள்ளது.
* ரயில் வழித்தட பராமரிப்பு பணிகளை (TMS) ஆன்லைன் மூலமாக கண்காணிக்க முடியும். ஆனால் TMS கண்காணிப்பு நடைமுறை, ஒழுங்காக செயல்படவில்லை.
* கடந்த 2017 முதல் 2021 மார்ச் வரை பொறியியல் துறையின் குறைபாடு காரணமாக 422 ரயில் தடம் புரளும் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தண்டவாளத்தை முறையாக பராமரிக்காததால் 171 முறையும் ரயில்கள் தடம் புரண்டுள்ளன.