புதுடெல்லி : டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் (ஜேஎன்யூ) முன்னாள் மாணவர் உமர் காலித்துக்கு டெல்லி நீதிமன்றம் பிணை மறுத்துவிட்டது.
பாஜக அரசு அமல்படுத்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இந்நிலையில் வடகிழக்கு டெல்லியில் நடந்த வன்முறை, கலவரத்தில் காவல் உயர் அலுவலர், பொதுமக்கள் என 53 பேர் உயிரிழந்தனர்.
ட்ரம்ப் வருகை : இந்த வன்முறை சம்பவத்திற்கு முன்பாக, அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இந்தியா வந்திருந்தார். இந்நிலையில், ட்ரம்பின் வருகையை கவனத்தில் கொண்டு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க, இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறைகள் நடைபெறுகின்றன என்பதை காட்டும்வகையில் இந்தப் போராட்டங்கள் நடைபெற்றதாக டெல்லி காவல்துறை குற்றஞ்சாட்டி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
உமர் காலித் கைது : இதில் ஜேஎன்யூ மாணவர் உமர் காலித், காங்கிரஸ் முன்னாள் கவுன்சிலர் இஷ்ரத் ஜகான், ஆம் ஆத்மி கவுன்சிலர் தாஹிர் உசேன் உள்பட பலர் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டு எழுந்தது.