தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் பணியாற்றிய நடிகை ஒருவர், பிப்ரவரி 17, 2017 இரவு கடத்தப்பட்டு வாகனத்தில் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், குற்றவாளிகள் அதனை வீடியோ எடுத்து பிளாக் மெயில் செய்துவந்ததாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் பிரபல மலையாள நடிகரான திலீப்பும் ஒருவர். இந்த வழக்கின் விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி நடிகை ஒருவர் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி வி.ஜி. அருண் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றமும் வழக்கறிஞரும் ஒத்துழைத்து செயல்படாவிட்டால், குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து, அப்பாவிகள் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறி மனுவை நிராகரித்தார். உண்மையைத் தேடும் மற்றும் நீதியை வழங்குவதற்கான முயற்சியில், சிறப்பு வழக்கறிஞரும், பாதுகாப்பு வழக்கறிஞரும் இணைந்து செயல்படுவார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பத்து பேரில், ஏழு பேரை முன்னதாக காவல்துறையினர் கைது செய்தனர். இதனையடுத்து நடிகர் திலீப் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.