2008ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பல்வேறு இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றது. அகமதாபாத் நகரில் ஒரே நாளில் 21 குண்டுகள் வெடித்ததில் 56 பேர் கொல்லப்பட்டனர், 200க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த பயங்கரவாத சம்பவத்திற்கு இந்தியன் முஜாஹுதீன் மற்றும் சிமி பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்றன.
இந்த பயங்கரவாத சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை அகமதாபாத் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் நிலையில், வழக்கின் தண்டனை விவரம் இன்று வெளியாகியுள்ளது. வழக்கில் மொத்தம் 49 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம், 49 பேரில் 38 பேருக்கு மரண தண்டனை விதித்துள்ளது. மீதமுள்ள 11 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
மேலும், வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 28 பேரை விடுவித்துள்ள நீதிமன்றம், அப்ரூவரான அயாஸ் சயீத் என்பவருக்கு மன்னிப்பு வழங்கி, அவரையும் வழக்குகளில் இருந்து விடுவித்துள்ளது.
இதையும் படிங்க:இமாலயத்தில் இளைப்பாற வந்திருக்கும் ரஷ்யப்பறவைகள் - ஒரு ஃப்ரஷ் கிளிக்ஸ்!