இந்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடியால் இதுவரை(ஜன - அக்) பல்வேறு தடைசெய்யப்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த சுமார் 200 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, 157 பயங்கரவாதிகள் இந்திய பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டனர்.
இது தொடர்பாக பாதுகாப்புப்படையினரிடம் திரட்டப்பட்ட தரவுகளின் அடிப்படையில் பார்க்கும்போது, இந்திய பாதுகாப்புப் படைகள் என அழைக்கப்படும் மத்திய ரிசர்வ் காவல் படை, ராணுவம், மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல் துறையின் தொடர் நடவடிக்கைகளின் மூலம், கடந்த ஜூன் மாதம் 49 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது ஒரு மாதத்தில் நிகழ்த்தப்பட்ட அதிகப்பட்ச என்கவுன்ட்டர் ஆகும். இந்த விகிதாச்சாரமும் கடந்தாண்டைவிட மிக அதிகம்.
அதேபோல் ஏப்ரல் மாதம் 28 பயங்கரவாதிகளும்; ஜூலை மற்றும் அக்டோபர் மாதங்களில் 21 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டதாக இந்திய பாதுகாப்புப் படையினரிடம் இருந்து தரவுகள் கிடைத்துள்ளன.