டெல்லியில் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகரித்து வரும் நிலையில், சில மணி நேரங்களுக்கு மட்டுமே ஆக்சிஜன் இருக்கின்றது என அங்குள்ள பல்வேறு மருத்துவமனைகளும் புகார்கள் தெரிவித்து வருகின்றன.
அந்த வரிசையில், டெல்லியில் உள்ள ஜெய்ப்பூர் கோல்டன் மருத்துவமனையில் நேற்றிரவு(ஏப்.23) ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இன்னும் ஒரு மணி நேரம் மட்டும் ஆக்சிஜன் கைவசம் இருப்பதால், 200க்கும் மேற்பட்ட நோயாளிகள் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
உடனடியாக போர்க்கால அடிப்படையில் ஆக்சிஜன் விநியோகிக்குமாறு மத்திய அரசிடம் மருத்துவமனை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தது. கிடைத்த தகவலின்படி, நேற்று மாலை(ஏப்.23) வரவிருந்த ஆக்சிஜன் சப்ளை வராததால் தான், நள்ளிரவில் பலர் ஆக்சிஜன் இன்றி உயிரிழந்தனர் எனக் கூறப்படுகிறது.
இதே போல, பத்ரா மருத்துவமனையும் ஆக்சிஜன் விநியோகம் வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த நிலையில், 500 லிட்டர் ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் மருத்துவமனைக்கு விரைந்துள்ளது.
ஆனால், எங்களிடம் 350க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளதாகவும், தினந்தோறும் 8 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் தேவை என மருத்துவர் குப்தா தெரிவிக்கிறார். இதுமட்டுமின்றி இன்று, அம்ரிஸ்டரில் உள்ள எம்.டி., நீல்காந்த் மருத்துவமனையில் ஏற்பட்ட ஆக்சிஜன் பற்றாக்குறையில் 5 கரோனா நோயாளிகள் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:உயிரைப் பறிக்கும் கரோனா - ஒரே நாளில் 2,624 பேர் பலி!