அம்ரேலி:குஜராத் மாநிலம் அம்ரேலியில் உள்ள சலாலா கிராமத்தை சேர்ந்த ஒரு ஜோடிக்கு நேற்று (மார்ச் 13) திருமண ஏற்பாடு விறுவிறுப்பாக நடிந்து கொண்டிருந்தது. இந்த திருமணம் நடக்கும் மண்டபத்தில் மணமக்கள், இரு வீட்டாரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.
தாலி கட்ட அரை மணி நேரமே மீதம் இருந்த நிலையில், மண்டபத்தில் சலசலப்பும், ஆரவாரமும் கேட்டுள்ளது. அதனால், மணமக்கள் தங்களது அறைகளை விட்டு வெளியே வந்து பார்த்தபோது, மண்டபத்துக்கு உள்ளேயே இரண்டு காளைகள் ஒன்றோடு ஒன்று முட்டிமோதி சண்டையிட்டுக் கொண்டிருந்தன. இதை குடும்ப உறுப்பினர்கள் எவ்வளவு முயற்சித்தும் தடுக்க முடியவில்லை.
இதனால் காளைகள் அங்கிருந்து செல்லும் வரை காத்திருப்பதே நல்லது என்று முடிவெடுத்தனர். இதனால் திருமண மண்டபத்துக்குள் இருந்த அனைவரும் பார்வையாளர்களாக மாறி ஆரவாரம் செய்ய தொடங்கிவிட்டனர். சில பேர் பயந்து மண்டபத்தை விட்டே ஓடி விட்டனர். வெகு சிலர் தைரியமாக காளைகளின் சண்டையை வீடியோ எடுக்கவும் தொடங்கினர். இப்படியே அரை மணி நேரமாக காளைகள் மண்டபத்துக்கு உள்ளேயே இருந்துள்ளன. அதுவரை திருமணத்தை பற்றி யாரும் கவலைப் பட்டத்தாக தெரியவில்லை. இதனால், திருமண ஜோடிகள் இலவு காத்த கிளிகள் போல காளைகள் அங்கிருந்து செல்லும் வரை காத்திருந்தனர்.