கர்நாடக சட்டப்பேரவையில் மார்ச் 29ஆம் தேதி, தேர்தல் சீர்திருத்தங்கள் குறித்த சிறப்பு விவாதம் நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஹெச். கே. பாட்டீல், ஆர்.டி.ஐ தரவுகளின்படி, கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை, சுமார் 19 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களை காணவில்லை எனக் குற்றம் சாட்டினார்.
லட்சக்கணக்கான ஈவிஎம் இயந்திரங்கள் காணாமல் போன சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது என்றும், இவற்றை யாரேனும் தவறாக பயன்படுத்திவிடக் கூடும் என்ற குற்றச்சாட்டை எப்படி மறுக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார். இதுதொடர்பாக, தேர்தல் ஆணையம் விளக்கமளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அப்போது, சபாநாயகர் விஷ்வேஷ்வர் காகேரி, பாட்டீலிடம் உள்ள விவரங்களைச் சமர்ப்பிக்கும் படி கேட்டுக்கொண்டார். அதோடு, காணாமல் போன 19 லட்சம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் தெரிவித்தார்.