வேட்டை, வன ஆக்கிரமிப்பு, வழித்தட ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு காரணங்களினாலும், மனிதர்களின் அச்சுறுத்தலாலும் நாட்டில் யானைகள் உயிரிழப்பது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. யானைகள் அழிந்து வருவதை உணர்ந்த மத்திய அரசு, யானைகள் பாதுகாப்புத் திட்டத்தை 1992ஆம் ஆண்டு தொடங்கியதுடன், யானைகள் காப்பகங்களை அமைத்துள்ளது. ஆனால் யானைகள் பாதுகாப்புத் திட்டம் வெறும் அறிவிப்பாக மட்டுமே உள்ளது.
அதிர்ச்சியளிக்கும் யானைகள் உயிரிழப்பு
இந்நிலையில், தென்காசியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், ரயில் மோதி யானைகள் உயிரிழப்பது தொடர்பாகக் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், 10 மாநிலங்களில் 2012-13ஆம் ஆண்டுக்குள் 27 யானைகள் ரயில் மோதி உயிரிழந்தாக தகவல் அளித்தது.
அதில், ரயில் பாதைகளில் யானைகள் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய பொது தகவல் அலுவலர் (யானை திட்டம்) கே.முத்தமிழ் செல்வன் தெரிவித்துள்ளார். ரயில் மோதி யானைகள் உயிரிழப்பதைத் தவிர்ப்பதற்காக ரயில்வே அமைச்சகம் (ரயில்வே வாரியம்) மற்றும் மத்திய சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் ஆகியவற்றிற்கு இடையே ஒரு நிரந்தர ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.