மும்பை:பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என மகாராஷ்டிரா மாநில அரசு ஊழியர் சங்கத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், அரசு தங்கள் கோரிக்கையை ஏற்கவில்லை என கூறி அரசு ஊழியர் சங்கத்தினர், செவ்வாய்க்கிழமை முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்தனர். அதன்படி, மும்பை, புனே உள்ளிட்ட நகரங்களில் அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பிரிவு 3, பிரிவு 4 ஊழியர்கள், ஆசிரியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடத்திய அரசு ஊழியர்கள், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இப்போராட்டத்தால் பல்வேறு அரசுத்துறைகளில் பணிகள் முடங்கின. 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் நிலையில், ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டதால், அதுசார்ந்த பணிகளும் பாதிக்கப்பட்டன. தங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றாவிட்டால் போராட்டம் தீவிரம் அடையும் எனவும் அரசு ஊழியர்கள் எச்சரித்தனர்.
இந்நிலையில், அரசு ஊழியர் சங்கத்தினருடன் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னவிஸ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அரசு ஊழியர் சங்கத்தினரின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உறுதி அளித்ததாக தெரிகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசிக்க, தலைமை செயலாளர் தலைமையில் இரண்டு நாட்களில் குழு அமைக்கப்படும் என்றும் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். மேலும் போராட்டத்தை கைவிட்டு, ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்ப வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.