டெல்லி மாநிலத்தின் மைதான் கர்ஹி காட்டில் இரண்டு சிறுவர்கள் (நவ. 09) மது அருந்தியுள்ளனர். இருவருக்கிடையிலும் பண விஷயத்தில் தகராறு இருந்துள்ளது. அது வாக்குவாதமாக முற்றவே, 17 வயது மதிக்கத்தக்க சிறுவன் தனது நண்பனைக் கல்லால் அடித்ததில் அச்சிறுவன் உயிரிழந்தார்.
தனது நண்பனைக் கொன்ற பதற்றத்தில் சிறுவன் அங்கிருந்து தப்பியோடினார். வெகுநாள்களுக்கு பிறகு இந்தச் சம்பவம் தொடர்பாக அச்சிறுவன் தனது தந்தையிடம் தெரிவிக்க அவர் காவல் நிலையத்தில் இது குறித்து தகவல் தெரிவித்துள்ளார். இந்தத் தகவலின் அடிப்படையில் டெல்லி காவல் துறையினர் சிறுவனை நேற்று (டிச. 02) கைதுசெய்தனர்.
சுமார் இரண்டாயிரத்து 500 ரூபாய் பணத்தைத் திருப்பிக் கொடுப்பதில் ஏற்பட்ட பிரச்னையில் தனது நண்பனைக் கொன்றதாக சிறுவன் ஒப்புக் கொண்டதாகக் காவல் துறையினர் தெரிவித்தனர். நவம்பர் 9ஆம் தேதி மைதான் கர்ஹி காவல் நிலையத்திற்கு, ஷம்ஷன் காட் அருகேயுள்ள வனப்பகுதியில் ஒரு சடலம் கிடப்பதாகத் தகவல் கிடைத்தது.