தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

"அது உணர்ச்சிவசத்தில் எடுத்த தவறான முடிவு" - ஆசாத் ஆதரவாளர்கள் மீண்டும் தாய்க்கழகத்தில் இணைவு! - தாரா சந்த்

குலாம் நபி ஆசாத்தின் ஆதரவாளர்கள் பலர் அவரது ஜனநாயக ஆசாத் கட்சியிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகமடைந்துள்ளனர்.

DAP l
DAP l

By

Published : Jan 6, 2023, 7:05 PM IST

டெல்லி:ஐம்பது ஆண்டுகளாக காங்கிரஸில் இருந்த குலாம் நபி ஆசாத், கட்சித் தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸில் இருந்த ஏராளமான மூத்த தலைவர்களும் ஆசாத்துடன் கைகோர்த்தனர். இதையடுத்து "ஜனநாயக ஆசாத் கட்சி" என்ற புதிய அரசியல் கட்சியை ஆசாத் தொடங்கினார்.

இந்த நிலையில் குலாம் நபி ஆசாத் கட்சியிலிருந்த பலர், அதிலிருந்து விலகி மீண்டும் காங்கிரஸில் இணைந்துள்ளனர். ஜம்மு காஷ்மீர் முன்னாள் துணை முதலமைச்சர் தாரா சந்த், முன்னாள் எம்எல்ஏ பல்வந்த் சிங், முன்னாள் அமைச்சர் பீர்சதா முகமது சையத் உள்ளிட்ட 17 பேர் தாய்க் கழகமான காங்கிரஸில் மீண்டும் இணைந்தனர். இவர்கள் டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

பின்னர் பேசிய தாராசந்த் உள்ளிட்டோர், தாங்கள் ஆசாத் கட்சியில் இணைந்தது, உணர்ச்சிவசத்தில் எடுத்த தவறான முடிவு என்றும், ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு காந்தி குடும்பத்துடன் நெருங்கிய உறவு இருக்கிறது என்றும் தெரிவித்தனர். தங்களை மீண்டும் இணைத்துக் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்தனர்.

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் உள்ளிட்ட அனைத்து பிரச்னைகளும் அதிகரித்துள்ளதால், இந்தச் சூழலில் மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைவது அவசியம் என்றும், அந்த வேலையை காங்கிரஸால் செய்ய முடியும் என்றும் தெரிவித்தனர்.

பின்னர் பேசிய கே.சி.வேணுகோபால், "விடுமுறையில் இந்த காங்கிரஸார் தற்போது மீண்டும் வந்துள்ளனர். காங்கிரஸ் அவர்களுடைய கட்சி என்பதை அவர்கள் உணர்ந்துவிட்டார்கள். இது வெறும் ஆரம்பம்தான். அதேபோல் நாட்டின் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் பாரத் ஜோடோ யாத்திரையில் இணைய உள்ளார்கள்" என்று கூறினார்.

ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையின் எதிரொலியாகவே, ஆசாத் ஆதரவாளர்கள் மீண்டும் காங்கிரஸில் இணைந்ததாக பார்க்கப்படுகிறது. ராகுல் காந்தியின் யாத்திரை வரும் 20ஆம் தேதி ஜம்மு காஷ்மீரில் நுழைகிறது. இதில் கலந்து கொள்வதற்காக குலாம் நபி ஆசாத்துக்கு காங்கிரஸ் சார்பில் அழைப்பு விடப்பட்டுள்ளது.

காங்கிரஸில் இருந்து விலகிய மூத்த தலைவர்கள் பலரும் மீண்டும் காங்கிரஸுக்கு சென்றுள்ளதால், குலாம் நபி ஆசாத் மீண்டும் காங்கிரஸில் இணைவாரா? என்ற கேள்வி எழுந்த நிலையில், காங்கிரஸில் இணையும் திட்டமில்லை என ஆசாத் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார். அதேநேரம் பாரத் ஜோடோ யாத்திரையில் பங்கேற்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து வெளியேறும் கட்டாய நிலைக்குத்தள்ளப்பட்டேன்... குலாம் நபி ஆசாத் பேட்டி...

ABOUT THE AUTHOR

...view details