டெல்லி:நாடு முழுவதும் உள்ள ஐஐடி, என்ஐடி, ஐஐஎம் போன்ற மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. குறிப்பாக சென்னை ஐஐடியில் கடந்த சில ஆண்டுகளாக மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன.
சென்னை ஐஐடியில் கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த மாதம் மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அதேபோல் ஆந்திராவைச் சேர்ந்த பிடெக் மாணவர் புஷ்பக் ஸ்ரீசாய் நேற்று (மார்ச்.14) தற்கொலை செய்து கொண்டார். மாணவர்களின் தொடர் தற்கொலைகள் பெற்றோர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்கார் தெரிவித்துள்ளார். இன்று(மார்ச்.15) நாடாளுமன்ற மாநிலங்களவையில் ஐஐடி மாணவர்கள் தற்கொலைகள் குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அதில், "இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 2022ஆம் ஆண்டில் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் மொத்தம் 19 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இவர்களில் எட்டு பேர் ஐஐடி மாணவர்கள், ஏழு பேர் என்ஐடி மாணவர்கள், ஒருவர் ஐஐஎம் மாணவர்.
கடந்த 2020ஆம் ஆண்டில் 5 தற்கொலைகள் மட்டுமே நடந்துள்ளன. அதேபோல் 2021ஆம் ஆண்டில் 7 தற்கொலைகள் நடந்துள்ளன. 2020, 2021ஆம் ஆண்டுகளில் கொரோனா பெருந்தொற்று காரணமாக நேரடி வகுப்புகள் நடக்காமல், ஆன்லைன் வகுப்புகள் நடந்ததால் தற்கொலைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.