ஜெகனாபாத்: பீகாரில் தனது மனைவிக்காகவும், தனது கிராம மக்களுக்காகவும் 22 ஆண்டுகள் கடினமாக உழைத்து மலையை உடைத்து சாலை அமைத்தவர் தசரத் மான்ஜி. ஒற்றை ஆளாக உளி, சுத்தியல், கடப்பாரை உதவியால், மலையை வெட்டி 360 அடி நீளமும், 30 அடி அகலமும் கொண்ட சாலையை உருவாக்கிய தசரத் மான்ஜி "மலை மனிதன்" என்று அழைக்கப்படுகிறார். மான்ஜி இறந்துவிட்டபோதும், அவரது ஆகப்பெரும் முயற்சியால் உருவான அந்த சாலை அவரது பெயரிலேயே இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மான்ஜியின் வழியில், பீகாரில் மற்றொரு மலை மனிதன் உருவாகியுள்ளார். பீகார் மாநிலம் ஜெகனாபாத் மாவட்டத்தில் உள்ள 1,500 அடி உயர கனௌரி மலையின் உச்சியில், பாபா யோகேஷ்வர் நாத் கோவில் உள்ளது. மலைக்கு அருகே உள்ள ஜாரு, பன்வாரியா ஆகிய இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும், இந்த கோவிலுக்கு சென்று பஜனை செய்வார்கள். ஆனால், கோயிலுக்கு செல்ல முறையான பாதை ஏதும் இல்லை.
இதனால், கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் கற்கள், முட்கள் நிறைந்த மலைப்பாதையில் பல மணி நேரம் செலவழித்து ஆபத்தான பயணம் செய்து வந்தனர். அதைக் கண்ட அதே பகுதியைச் சேர்ந்த பாஸ்வான் (50) என்பவர், பக்தர்கள் கோயிலுக்கு செல்ல ஏதுவாக படிக்கட்டுகள் அமைக்க முடிவு செய்தார்.
தீவிர சிவ பக்தனான பாஸ்வான் உளி, சுத்தியல் உதவியால் எட்டு ஆண்டுகள் இரவு பகலாக உழைத்து மலையில் 400 படிக்கட்டுகளை உருவாக்கியுள்ளார். மலைக்கோயிலை அடைய ஒன்றல்ல இரண்டு வழிகளை உருவாக்கியுள்ளார் பாஸ்வான். ஒரு பாதை ஜாரு கிராமத்திலிருந்தும், மற்றொன்று பன்வாரியா கிராமத்திலிருந்தும் அமைக்கப்பட்டுள்ளது. கிராம மக்களின் ஒத்துழைப்புடனும், தனது குடும்பத்தாரின் முழு உழைப்புடனும் இந்த வேலையை செய்துள்ளார்.
கனெளரி பாஸ்வான் முதலில் லாரி ஓட்டுநராக இருந்தார். பிறகு கொத்தனார் வேலை செய்தார். நாட்டுப்புற பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவர். கோயிலுக்கு பஜனைக்காக செல்லும் மக்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்வதைப் பார்த்தே பாஸ்வான் படிக்கட்டுகள் அமைக்க முடிவு செய்து, தற்போது அதை செய்து முடித்துள்ளார். அதேபோல், மலையில் புதைந்துள்ள பழங்கால சிலைகளையும் தேடிக் கண்டுபிடித்து, கோயிலுக்கு செல்லும் வழியில் நிறுவியுள்ளார். குறிப்பாக 6 அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன புத்தர் சிலையை கண்டுபிடித்தார்.
இதுகுறித்து பாஸ்வான் கூறும்போது, "2014ஆம் ஆண்டிலிருந்து படிக்கட்டுகள் அமைக்கும் பணியை செய்து வருகிறேன். இன்னும் சுமார் 10 படிக்கட்டுகள் செதுக்க வேண்டியுள்ளது. அதுவும் விரைவில் முடிக்கப்படும். இந்த முயற்சிக்கு மனைவி, குழந்தைகளும் ஒத்துழைத்தனர். இந்த பாபா கோயிலை அரசு சுற்றுலாத் தலமாக மாற்ற வேண்டும் என்பது எனது விருப்பம்" என்றார்.
இதையும் படிங்க: காவல் நிலையத்தில் மது விருந்து! 7 பேர் கைது..