தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானேவில், இன்று(டிச.1) காலை கல்யாண் ரயில் நிலையத்திற்கு அருகே உள்ள குடியிருப்பு பகுதியில் சிறுமி ஒருவரின் சடலம் கிடப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சிறுமியின் சடலத்தை மீட்டனர். பிறகு போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயங்களை வைத்து, சந்தேகத்தின் பேரில் அதே பகுதியைச் சேர்ந்த 15 வயது சிறுவனை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை சிறுவன் ஒப்புக் கொண்டதாக தெரிகிறது. சில நாட்களுக்கு முன்பு சிறுமியின் தந்தை தன்னை அடித்ததாகவும், அதற்கு பழிவாங்கும் நோக்கிலேயே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, பிறகு பிளேடால் கழுத்தை அறுத்து கொலை செய்ததாகவும் சிறுவன் போலீசாரிடம் தெரிவித்துள்ளான். இதையடுத்து போலீசார் சிறுவனை காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
24 மணி நேரமும் மக்கள் நடமாட்டம் காணப்படும் கல்யாண் ரயில் நிலையப் பகுதியில் நடந்த இந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், போலீசார் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் யூடியூபருக்கு 'லைவ்'வில் பாலியல் தொல்லை - இரு இளைஞர்கள் கைது...