பெங்களூரு :கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், தொடர்ந்து நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சி 113 இடங்களிலும், பாஜக 66 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன.
முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம் 26 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன. வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பல்வேறு தொகுதிகளில் பாஜக அமைச்சர் வேட்பாளர்கள் பின்தங்கி உள்ளனர். இரண்டு தொகுதியில் போட்டியிட்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.அசோகா, பத்மநாபநகர் தொகுதியில் முன்னிலையிலும், கனகபுரா தொகுதியில் பின்தங்கியும் உள்ளார்.
அமைச்சரவையின் முக்கிய துறையான சுகாதாரத் துறையை கவனித்து வந்த டாக்டர் கே. சுதாகர், சிக்கபள்ளூர் தொகுதியில் பின்னடைவை சந்தித்து உள்ளார். அவரைப் போல் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் எம்.டி.பி. நாகராஜ், ஹசகோட் தொகுதியில் பின்தங்கிய நிலையில் உள்ளார்.
அதேபோல் இரண்டு தொதியில் போட்டியிட்ட வீட்டு வசதித் துறை அமைச்சர் வி.சோமண்ணா, சாமராஜ்நகர், மற்றும் வருணா ஆகிய இரண்டிலும் பின்தங்கி உள்ளார். நீர்ப்பாசனத் துறை அமைச்சர் கோவிந்த கரஜோலா முதோல் தொகுதியில் பின்தங்கிய நிலையில் உள்ளார். போக்குவரத்துறை அமைச்சர் பி. ஸ்ரீராமமுலு, பெல்லாரி கிராமப்புற தொகுதியில் பின்தங்கிய நிலையில் உள்ளார்.