கோலார்(கர்நாடகா):கடந்த சில நாட்களாகவே தக்காளியின் விலை தினமும் அதிகரித்த வண்னம் உள்ளது. ஏனென்றால் தக்காளி இல்லாமல் சமைக்கவே முடியாது என்ற கட்டாயம் இருந்து வருகிறது. ஆகையால் தான் தக்காளி 'சமையலறையின் ராணி' என அழைக்கப்படுகிறது. தக்காளிக்கு தற்போது அதிக கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் நேற்று (ஜூலை 11 செவ்வாய்கிழமை) கோலாரில் உள்ள வேளாண்மை விளைபொருள் சந்தைக் குழுவில் (ஏபிஎம்சி) 15 கிலோ தக்காளி பெட்டி ரூ.2,200-க்கு ஏலம் விடப்பட்டு சாதனைப் படைத்தது குறிப்பிடத்தக்கது.
கோலாரில் உள்ள ஏபிஎம்சி சந்தை ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய சந்தையாகும். மேலும் இந்தியா முழுவதிலும் இருந்து வியாபாரிகள், காய்கறிகளை வாங்க இங்கு வந்து செல்வது வழக்கம். சமீபகாலமாக தக்காளியின் விலை அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் உள்ள விஜகூர் கிராமத்தைச் சேர்ந்தவர், வெங்கடரமணன். இவர் சுமார் 15 கிலோ எடையுள்ள தக்காளி பெட்டியை ரூ.2,200க்கு விற்பனை செய்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன், வெங்கடரமணன், தனது ஒரு ஏக்கர் நிலத்தில் தக்காளியைப் பயிரிட்டுள்ளார். அதை ஏபிஎம்சி மார்க்கெட்டுக்கு கொண்டு வந்து பெரும் இலாபம் ஈட்டியுள்ளார். மொத்தம் 36 பெட்டிகளை ஏலம் விட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகாவில் உள்ள கோலார் மற்றும் சிக்கபள்ளாப்பூர் மாவட்டத்தில் அதிக அளவில் தக்காளி விளையும் எனக் கூறப்படுகிறது.