ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியிலிருந்து நேற்று (ஜூன் 28) அதிகாலையில் சுமார் 15 சிறார்கள் தப்பியோடி உள்ளனர். இதற்காக சிறுவர்கள் கழிவறையில் இருந்த வென்டிலேட்டரை உடைத்துவிட்டு, அதன் வழியாக தப்பியதாகத் தெரிகிறது.
இது குறித்து சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியின் கண்காணிப்பாளர் மனோஜ் கெலாட் கூறும்போது, "நேற்று அதிகாலை 3 மணியளவில் இந்த சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. 15 சிறுவர்கள் கழிவறையின் மேல் சுவரில் இருந்த வென்டிலேட்டரை உடைத்துவிட்டு, அதன் மூலம் தப்பியுள்ளனர்.
தப்பியோடிய சிறுவர்களில் ஒருவருக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது. அவர் நேற்று விடுதலை செய்யப்பட இருந்தார். அவரது வழக்கறிஞர் ஜாமீன் பெற்றதற்கான ஆவணங்களுடன் சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளிக்கு வந்தபோதுதான், சிறுவன் மற்ற சிறார்களுடன் தப்பிச் சென்றது தெரிய வந்தது" என கூறினார்.
சிறுவர்கள் தப்பியோடியது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தனர். பின்னர், சிறுவர் சீர்த்திருத்தப் பள்ளியின் கண்காணிப்பாளர் மனோஜ் கெலாட் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தப்பிச் சென்ற சிறுவர்களை நான்கு தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.