அஸ்ஸாம் மாநிலம் கர்பி அங்லாங் மாவட்டத்தில் திபு மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் சுகாதாரத் துறை அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா கலந்துக்கொண்டார்.
இந்நிகழ்வில், 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். விழா முடிந்ததும், அனைவருக்கும் பிரியாணி போட்டலங்கள் வழங்கப்பட்டுள்ளன. பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கும் போதே, பலருக்கு வாந்தி, வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அருகிலுள்ள மருத்துவனையில் அனைவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்
இதுகுறித்து பேசிய அமைச்சர் ஹிமாந்தா பிஸ்வா சர்மா, "இதுவரை 145 பேர் மருத்துவனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நானும் அதே சமைலறையிலிருந்து வந்த உணவை தான் சாப்பிட்டேன். எனக்கு வயிற்று வலி ஏற்பட்டது. ஆனால், தற்போது நன்றாக உள்ளேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய காவல் துறை துணை ஆணையர் சந்திர த்வாஜா சிங்கா, " இச்சம்பவம் குறித்து விசாரிக்க மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நிகழ்வில் கலந்து கொண்ட ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆனால், அவரது மரணத்திற்கு விழாவில் சாப்பிட்ட உணவு தான் காரணமா என்பது தெரியவில்லை. உணவின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பபட்டுள்ளன” என்றார்.