புதுச்சேரி:மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் ராஜாங்கம் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதில், புதுச்சேரியில் நாளை நடக்கவுள்ள தேர்தல் தொடர்பான தேர்தல் கமிஷன் குறித்த வழிகாட்டு நடைமுறைகளின் படி தேர்தல் நடக்கும் பகுதிக்கு பகுதி, தொகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு சில பகுதிகளில் சில தொகுதிகளுக்கும் பொருந்தும்.
கடந்த மாதம் 22ஆம் தேதி புதுச்சேரி ஆட்சியர் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி வரும் 7ஆம் தேதி காலை 7 மணி வரை கூட்டம் கூட்ட, முழக்கங்கள் எழுப்ப, ஒலிப்பெருக்கி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி தவிர்த்து தேர்தல் நடக்கும் மற்ற மாநிலங்களில் இதுபோன்ற தடை உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. உரிய காரணம் எதுவும் கூறாமல் மாநிலம் முழுவதும் தடை விதித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே புதுச்சேரி ஆட்சியரின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.