டெல்லி: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சேர்ந்த அஃப்ஷின்(12) என்ற சிறுமி, 10 மாத குழந்தையாக இருந்தபோது நடந்த விபத்தில் அவளது கழுத்து 90 டிகிரி வளைந்துவிட்டது. இதை சரிசெய்ய பெற்றோர் உள்ளூர் மருத்துவர்களிடம் அழைத்துச் சென்றனர். ஆனால், சரி செய்ய முடியவில்லை. கழுத்து வளைந்துவிட்டதால், தனது அடிப்படை வேலைகளைக் கூட சிறுமியால் செய்ய முடியவில்லை. சாதாரண குழந்தைகளைப் போல பள்ளி செல்லவோ, விளையாடவோ முடியாமல் பாதிக்கப்பட்டிருந்தார்.
நாட்கள் செல்ல செல்ல சிறுமியின் உடல்நிலை மிகவும் மோசமாவிட்டது. பெருமூளை வாத நோயும் ஏற்பட்டது. இந்த நிலையில், சிறுமியின் தாயார் அவரை மருத்துவ முகாம் ஒன்றுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியின் வித்தியாசமான நோய் மற்றும் மருத்துவ நிலை, மருத்துவர்கள் - மக்கள் மத்தியில் கவனம் பெற்றது. சமூக வலைதளங்களிலும் வெளியானது.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் நடிகர் அஹ்சன் கான், சிறுமி அஃப்ஷினின் நோய் குறித்து முகநூலில் பகிர்ந்து, சிறுமிக்கு உதவ வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த புகைப்படம் டெல்லி அப்பல்லோ மருத்துவமனை மருத்துவர்கள் கவனத்திற்கு சென்றது. இதையடுத்து மருத்துவர்கள் சிறுமிக்கு இலவச சிகிச்சை அளிக்க முடிவு செய்து, சிறுமியை டெல்லியில் உள்ள இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனைக்கு வரவழைத்தனர். பிறகு பல்வேறு அறுவை சிகிச்சைகள் மூலம் சிறுமியின் கழுத்தை நேராக்கியுள்ளனர். பல மாதங்களாக சிகிச்சை செய்யப்பட்டதாக தெரிகிறது.