உஜ்ஜைன் (மத்திய பிரதேசம்):மத்தியப்பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரில், மஹாகல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பட்நகர் சாலையில் 12 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவர் அரை நிர்வாண நிலையில், காயங்களில் ரத்தம் வழிந்த நிலையில் போலீசாரால் கண்டறியப்பட்டார். அந்த சிறுமியை மீட்ட போலீசார், சிகிச்சைக்காக சரக் மருத்துவமனையில் அனுமதித்தனர், பின்னர் மேல் சிகிச்சைக்காக இந்தூருக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து உஜ்ஜைன் எஸ்பி சச்சின் சர்மா கூறுகையில், “இந்தூரில் சிறுமியை மருத்துவர்கள் பரிசோதித்தபோது அவர் நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. மேலும், சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது. மேலும், சிறுமியின் பிறப்புறுப்பு பாலியல் வன்புணர்வால் காயமடைந்து இருப்பதால் அந்த காயத்தில் இருந்து அதிகளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால், மருத்துவர்கள் சிறுமிக்கு ரத்தம் ஏற்றி சிகிச்சை அளித்து வருகின்றனர். அந்த சிறுமி பேசுவதை வைத்து பார்க்கையில், அவர் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பிரக்யாராஜ் பகுதியைச் சேர்ந்தவராக இருக்கலாம் என கருதுகிறோம். சிறுமி சுயநினைவற்று இருப்பதால் அவருக்கு இந்த சம்பவம் எங்கு நடந்தது என விசாரிக்க முடியவில்லை.
சிசிடிவி காட்சிப் பதிவுகளில் சிறுமி நடந்து வந்த பகுதிகளை ஆராய்ந்தபோது, இந்தூரின் உள்வட்ட சாலையில் உள்ள சவ்ரா கேடி பகுதியில் வீட்டின் வெளியே நின்ற நபர் ஒருவரிடம் சிறுமி அரை நிர்வாண நிலையில் உதவி கேட்பதும், அதற்கு அந்த நபர் மறுப்பதும் பதிவாகியுள்ளது” எனத் தெரிவித்தார்.
இந்த சம்பவம் குறித்து மத்தியப்பிரதேசம் உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறுகையில், “சிறுமி விவகாரம் குறித்து மஹாகல் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடைபெற்று வருகிறது. சிறப்பு புலனாய்வு குழு (special investigation team) அமைக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.
போலீசார் சிசிடிவி காட்சிப் பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த குற்றத்தின் பின்னணியில் உள்ளவர்கள் விரைந்து கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவத்தில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரை சிறப்பு புலனாய்வுக் குழுவினர் விசாரித்து வருகின்றனர்.