மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 12 சட்டப்பேரவை உறுப்பினர்கள் அக்கட்சியிலிருந்து விலகி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.
வெளியேறிய 12 எம்.எல்.ஏக்களில் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான முகுல் சங்மாவும் அடக்கம். தங்களின் கட்சி தாவல் முடிவு கடிதத்தை மேகாலயா சபாநாயகர் மெட்பா லிங்யோத்திடம்(Metbah Lyngdoh) வழங்கினர்.
இந்த திடீர் நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி பெரும் கலக்கத்தை சந்தித்துள்ளது. இதன்மூலம் மாநிலத்தில் காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்து, தற்போது திரிணாமுல் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.
காங்கிரஸ் மேலிடம் மீது முகுல் சங்மா அதிருப்தி
மொத்தம் 60 இடங்களைக் கொண்ட மேகாலயா சட்டப்பேரவையில், தேசிய மக்கள் கட்சி-பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி நடத்திவருகிறது. பிரதான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உள்ள நிலையில், அங்குள்ள ஷில்லாங் மக்களவை தொகுதி உறுப்பினர் வின்சென்ட் பாலாவை மாநில காங்கிரஸ் தலைவராக கட்சி மேலிடம் செப்டம்பர் மாதம் நியமித்தது.
இந்த முடிவு காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவரான முகுல் சங்மாவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது. எனவே, தனது ஆதரவு எம்.எல்.ஏக்களுடன் கூண்டோடு வெளியேறி திரிணாமுல் கட்சியில் சங்மா இணைந்துள்ளார்.
கட்சியை விரிவுபடுத்தும் மம்தா
மேற்கு வங்கத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைத்து முதலமைச்சரான மம்தா பானர்ஜி, தனது கட்சியை அண்டையில் உள்ள வட கிழக்கு மாநிலங்களில் வலுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கியுள்ளார்.
ஆளும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு வலுவான எதிர்க்கட்சியாக தன்னை மம்தா முன்னிலை படுத்திவருகிறார். இதன் காரணமாக காங்கிரஸ் உள்ளிட்ட முன்னணி எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் தற்போது மம்தா கட்சியை நோக்கி படையெடுக்கத் தொடங்கியுள்ளனர்.
இரு நாள்களுக்கு முன்னர், ஐக்கிய ஜனதாதளத்தின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் பவன் வர்மா, காங்கிரசை சேர்ந்த கீர்த்தி ஆசாத் ஆகியோர் டெல்லி வந்திருந்த மம்தாவை சந்தித்து, அவர் கட்சியில் இணைந்தனர்.
இதையும் படிங்க:NITI Aayog's urban survey: நிதி ஆயோக் வளர்ச்சிப் பட்டியலில் கோவை, திருச்சிக்கு இடம்