ஸ்ரீநகர்:ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் கடந்த ஜூன் 25ஆம் தேதி ‘பெடல் ஃபார் பீஸ்’ (Pedal for Peace) என்ற சைக்கிளிங் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை ஜம்மு காஷ்மீர் காவல் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த நிகழ்வில் ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, துணைநிலை ஆளுநரின் ஆலோசகர் ராஜீவ் ராய் பாட்நகர், ஏசிஎஸ் ஹோம் துறையைச் சேர்ந்த ஆர்கே கோயல், டிஜிபி தில்பக் சிங், ஏடிஜிபி, ஜம்மு காஷ்மீரின் எஸ்ஜிஎம் கில்லானி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியின் நிறைவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது சிலர் தேசிய கீதத்திற்கு உரிய மரியாதை அளிக்காத வண்ணம் எழுந்து நிற்காமல் இருந்து உள்ளனர். இது தொடர்பான தகவல் செய்திகளாக வெளி வந்தது. இந்த நிலையில், அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் மற்றும் அமைதிக்கு ஆபத்து என கருதிய ஸ்ரீநகர் காவல் துறை, 12 பேர் மீது 107/151 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளது.
அது மட்டுமல்லாமல், வழக்குப் பதிவு செய்யப்பட்ட 12 பேரையும் காவல் துறையினர் கைது செய்து உள்ளனர். மேலும், தேசிய கீதத்தை குறிப்பிட்ட சிலர் அவமதிக்கும்போது, அதனை தடுக்கத் தவறிய காவல் துறையினர் 4 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதன் அடிப்படையில், தங்களது கடமையை செய்யத் தவறியதாக ஸ்ரீநகர் காவலர்கள் 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர்.
மேலும், இது தொடர்பாக ஸ்ரீநகர் காவல் நிலையத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜம்மு காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் கலந்து கொண்ட நிகழ்வில் தேசிய கீதத்திற்கு தகுந்த மரியாதை அளிக்காததால் 14 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக வெளிவந்த செய்தியில் உண்மை இல்லை” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.