ராய்கட்: மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் சமூக ஆர்வலர் அப்பாசாகேப் தர்மாதிகாரிக்கு அரசு விருது (maharashtra bhushan award) வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர் கபில் பாட்டீல், மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பிரமாண்ட மைதானத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சமூக ஆர்வலர்களின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். மக்கள் கூட்டம் அதிகமாக இருந்த அதில், மேடை நிகழ்ச்சிகளைக் காணும் வகையில் ஆடியோ மற்றும் வீடியோ வசதிகள் செய்யப்பட்டிருந்தது. ஆனால் வெயிலை மறைக்கப் பந்தல் ஏதும் போடப்படவில்லை.
காலை 11.30 மணிக்குத் தொடங்கிய பரிசளிப்பு விழா பிற்பகல் 2 மணி வரை நடந்தது. அந்த நேரத்தில் வெப்பநிலை அளவு அதிகபட்சமாக 38 டிகிரி செல்சியஸ் வரை பதிவானதாகக் கூறப்படுகிறது. இதனால் விழாவைக் காண வந்த பலரும் வெப்பத்தைத் தாங்க முடியாமல் சுருண்டு விழுந்தனர். சுமார் 50-க்கும் மேற்பட்டோர் சுட்டெரிக்கும் வெயிலால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
ஆனாலும், சிகிச்சை பலனின்றி இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று சிகிச்சை பெற்று வருபவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறிய முதலமைச்சர் ஷிண்டே உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 5 லட்சம் ரூபாய் அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 30 பேர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளதாகவும் 24 பேர் சிகிச்சையில் உள்ளதாகவும் அதில் இருவர் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.