டெல்லி: வடகிழக்கு டெல்லியின் உஸ்மான்பூர் பகுதியின் எக்ஸ் பிளாக்கில் உள்ள ஒரு வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர், 10ஆம் வகுப்பு மாணவியை தலையில் தாக்கி தப்பிச்சென்றுள்ளார். உஸ்மான்பூர் பகுதியில் உள்ள வாடகை வீட்டில் கணவன், மனைவி, தங்கள் மகன் மற்றும் மகளோடு வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று காலை கணவன், மனைவி இரண்டு பேரும் வேலைக்குச்சென்றுள்ளனர். அவர்களின் மகனும் பள்ளிக்குச் சென்றுள்ளார். இந்தச் சூழலில் 10ஆம் வகுப்பு படிக்கும் அவர்களது மகள் பரீட்சைக்குத் தயாராகி வருவதால், அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது திடீரென வீட்டிற்குள் நுழைந்த நபர் ஒருவர் அந்த சிறுமியை கட்டிங் பிளேயரால், தலையில் கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
பின்னர் அவனிடமிருந்து எப்படியோ தப்பித்த சிறுமி, ரத்த வெள்ளத்தில் வீட்டு உரிமையாளரிடம் சென்று நடந்ததை கூறியுள்ளார். அதன் பின் உரிமையாளர், சிறுமியின் வீட்டிற்கு வந்து பார்த்தபோது அங்கு யாரும் இல்லை. இதனால், உடனடியாக படுகாயம் அடைந்த சிறுமியை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அவரின் பெற்றோருக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளார்.