கேரளா:இந்திய விடுதலைப் போராட்டத்தின்போது ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், மாப்பிள இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த நிலக்கிழார்களுக்கு எதிராகவும் மலபார் புரட்சியாளர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மகாத்மா காந்தி, பல தேசிய தலைவர்களின் ஆதரவைப் பெற்ற இந்தப் போராட்டம்தான் ஒத்துழையாமை இயக்கப் போராட்டத்துக்கு வித்திட்டது. பெரும் கலகத்தை ஏற்படுத்திய மலபார் புரட்சியாளர்களை ஆங்கிலேயர்களால் சமாளிக்க முடியவில்லை. பின்னர் 1921ஆம் ஆண்டு அவர்களை ஆங்கிலேயே அரசு தன் கொடுங்கோலால் அடக்கியது.
மலபார் புரட்சியாளர்களைக் கைதுசெய்த ஆங்கிலேயே அரசு, அவர்களைச் சிறைக்கு அனுப்பும்போது நிகழ்ந்த சம்பவம் ஒன்று இன்றும் ஆறாத வடுவாக இருக்கிறது. பாரவண்டி படுகொலை என அழைக்கப்படும் இதன் நூற்றாண்டு நினைவு நாள் இந்த ஆண்டு வருவதையொட்டி, இந்தத் தொகுப்பில் அது குறித்து காணலாம்.
100 மலபார் புரட்சியாளர்களைக் கைதுசெய்த ஆங்கிலேயர்கள், அவர்களை கர்நாடக மாநிலம் பெல்லாரியில் உள்ள மத்திய சிறைக்கு அனுப்ப முடிவுசெய்தனர். 1921 நவம்பர் 20ஆம் தேதி மலப்புரம் மாவட்டம் திரூர் ரயில் நிலையத்திலிருந்து ஒரு மூடப்பட்ட பாரவண்டி (wagon) மூலம் புரட்சியாளர்களை பெல்லாரிக்கு அனுப்பினர். மூடப்பட்ட சிறிய பாரவண்டியில் அனைவரையும் நெருக்கி அனுப்பிவைத்ததால், பலரும் உயிரிழந்தனர்.
இது குறித்து இந்தக் கோர சம்பவத்தில் தப்பிப் பிழைத்த கன்னோலி அகமது ஹாஜி தனது சுயசரிதையில், தலையணைக்குள் பஞ்சை வைத்து திணிப்பதுபோல் எங்களைப் பாரவண்டிக்குள் அடைத்தனர். கைதுசெய்யப்பட்டவர்களில் பலர், ஒருவர் கால் மீது ஒருவர் நிற்கும் சூழல் ஏற்பட்டது. ராணுவ அலுவலர்கள் எங்களை உள்ளே வைத்து அடைத்து கதவுகளைத் தாழிட்டனர். பயணம் தொடங்கிய சில மணி நேரத்தில் பாரவண்டி ஒரு வாயு அறையாக மாறியது.
பாரவண்டிக்குள் ஒளியும் வராது, காற்றும் புகாது கைதிகள் கதறத் தொடங்கினர். கடுமையான தாகத்தால் நிலைகுலைந்தனர். தாகம் தாங்க முடியாமல் தங்கள் வியர்வையை தாங்களே குடித்தனர், உச்சகட்டமாக சிறுநீரையும் குடிக்க முயற்சித்தனர்.