தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூடுதல் பொறுப்பாக கடந்த பிப்ரவரி 18ஆம் தேதி புதுச்சேரி துணைநிலை ஆளுநராகப் பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்று இன்றுடன் 100 நாட்களை நிறைவு செய்தார்.
தமிழிசை செய்த 100 நாள் பணி
புதுச்சேரியில் துணைநிலை ஆளுநராகப் பெறுப்பேற்றவுடன் முதல் பணியாக ஆளுநர் மாளிகையைச் சுற்றி அமைந்திருந்த தடுப்புகளை அகற்றினார். அங்கன்வாடிகளில் வாரத்தில் மூன்று நாட்கள் முட்டை வழங்க உத்தரவுபிறப்பித்தார். கரோனா பாதித்த நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை தெலுங்கானாவில் இருந்து புதுச்சேரிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்தார்.
அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் கரோனா நிவாரணமாக ரூபாய் 3000 வழங்க அனுமதி அளித்தார். ஒன்றிய அரசிடம் இருந்து புதுச்சேரிக்குத் தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்க உதவி செய்தார்.
இந்நிலையில் புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் சுகாதாரத் துறையின் 'சிட்டி' கரோனா தகவல் பகிர்வு தளத்தை (chat box) துவக்கி வைத்து, கரோனாவால் உயிரிழந்த பத்திரிக்கையாளரின் குடும்பங்களுக்கு நிதி உதவியை ஆளுநர் தமிழிசை வழங்கினார்.
கரோனா தொற்றால் உயிரிழந்த புதுச்சேரி பத்திரிக்கையாளர் குடும்பங்களுக்கு செஞ்சிலுவை சங்கத்தின் மூலமாக தலா ஐம்பதாயிரம் ரூபாய் நிதியை அவர் வழங்கினார்.
இதையும் படிங்க: தடுப்பூசி செலுத்துவதில் மாநிலங்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வு' - வைகோ