மால்டா: மேற்கு வங்க மாநிலம், மால்டா மாவட்டத்தைச் சேர்ந்த முர்சலீன் என்ற சிறுவன் (10) ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சிறுவன் தனது கிராமத்திற்கு அருகில் உள்ள குளத்தில் மீன் பிடிக்கச் சென்றான். அப்போது அருகில் உள்ள ரயில் தண்டாவளத்தின் கீழே இருந்த பெரிய பள்ளத்தைக் கண்டார்.
உடனடியாக, அந்தப் பாதையில் சீல்டா-சில்சார் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் முழு வேகத்தில் வந்து கொண்டிருந்ததைப் பார்த்த சிறுவன், தனது சிவப்பு நிற டி-சர்ட்டைக் கழற்றி, ரயில் ஓட்டுநர் தூரத்தில் இருந்து பார்க்கும் வகையில் அதை வலுவாக அசைத்து நின்றான். சிறுவனைப் பார்த்த ரயில் ஓட்டுநர் சரியான நேரத்தில் ரயிலை மெதுவாக நிறுத்தினார்.
உடனே ரயில் ஓட்டுநர் கீழே இறங்கி ரயிலை நிறுத்தியதற்கான காரணத்தைக் கேட்டறிந்தார். அப்போது சிறுவன் பள்ளத்தை காண்பித்துள்ளார். பல பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய சிறுவனின் செயலைக் கண்டு ரயில் ஓட்டுநர் பாராட்டினார். பின் பாலலுகா ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து ஆர்பிஃப் வீரர்கள் மற்றும் ரயில்வே ஊழியர்களை வரவழைத்து பள்ளம் சரி செய்யப்பட்டது. அதன்பின் ஒன்றரை மணி நேரம் கழித்து ரயில் இயக்கப்பட்டது.
இது குறித்து சிறுவன் கூறுகையில், ‘நான் மீன்பிடிக்கச் செல்லும்போது தண்டவாளத்தில் பள்ளம் இருந்ததைக் கண்டு, எனது டீ-சர்ட் ஐக் கழற்றி கொடிபோல் அசைத்து ரயிலை நிறுத்தினேன். ரயில் ஓட்டுநர் கீழே இறங்கி காரணத்தைக் கேட்டறிந்து என்னை பாராட்டினார்’ என கூறினார்.
இது குறித்து கிராமவாசி சாஹிமுதீன் கூறுகையில், ‘நான் தண்டவாளத்தைக் கடக்க முயன்றபோது சிறுவன் டீ-சர்ட்டை வைத்து கொடியசைத்து ரயிலை நிறுத்திய செயலைக் கண்டு பூரிப்படைந்தேன்’ என்றார். மேலும், இந்த செயலுக்கு வடகிழக்கு ரயில்வே சார்பில் சிறுவனுக்கு விருது அறிவிக்கப்பட்டது.
மேலும், கிழக்கு ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி கௌசிக் மித்ரா சிறுவனைப் பாராட்டினார். இது குறித்து கிழக்கு ரயில்வே சார்பில் அதிகாரி கூறுகையில், ‘வடகிழக்கு எல்லை ரயில்வேயில் நடந்த சம்பவத்தால் இந்த விஷயம் எங்கள் கவனத்திற்கு வரவில்லை. கிழக்கு ரயில்வே சார்பாக, நான் குழந்தையை வாழ்த்துகிறேன். ஆனால், அவருக்கு வெகுமதி அளிப்பது குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை," என்று அவர் கூறினார்.
இதையும் படிங்க:Asian Games : ஆசிய ஆண்கள் ஹாக்கியில் இந்தியா அபாரம்! உஸ்பெகிஸ்தானை ஊதித் தள்ளியது!