சத்தீஸ்கர்:சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்று(ஏப்.26) தந்தேவாடா மாவட்டத்தில் அரன்பூர் பகுதியில் மாவோயிஸ்ட்கள் நடமாட்டம் இருப்பதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாநில சிறப்பு காவல் படையினர் குறிப்பிட்ட பகுதிக்குச் சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடுதலுக்குப் பிறகு போலீசார் அப்பகுதியிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர்.
போலீஸ் வாகனம் வரும் வழியில் மாவோயிஸ்ட்டுகள் கன்னிவெடிகளை புதைத்து வைத்திருந்ததாகத் தெரிகிறது. வாகனம் குறிப்பிட்ட இடத்திற்கு வந்ததும் கன்னிவெடிகள் வெடித்தன. இந்த தாக்குதலில் போலீஸ் வாகனம் தூக்கி வீசப்பட்டது. இதில், வாகனத்தில் இருந்த 10 போலீசார் மற்றும் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பலர் காயமடைந்ததாகத் தெரிகிறது.
இது குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்குச் சென்று இறந்தவர்களின் உடல்களை மீட்டனர். மேலும் தாக்குதல் நடத்திய மாவோஸ்ட்டுகளை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மாவோயிஸ்ட்டுகள் தாக்குதலில் உயிரிழந்த காவலர்களின் குடும்பத்தினருக்கு சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "தந்தேவாடாவில் அரன்பூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் மாவோயிஸ்ட்டுகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைக்காக சென்ற சிறப்பு காவல் படையினர் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 10 காவலர்கள் மற்றும் ஒரு ஓட்டுநர் வீரமரணம் அடைந்த செய்தி மிகவும் வருத்தமளிக்கிறது. அவர்களின் குடும்பத்தாரின் துயரத்தில் மாநில மக்கள் அனைவரும் பங்கு கொள்கிறோம். உயிரிழந்த 11 பேரின் ஆன்மா சாந்தியடையட்டும்" என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.