காந்திநகர் :குஜராத்தில் அரசுப்பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். குஜராத் மாநிலம், காந்திநகர் மாவட்டம், கலோல் டவுனில் திரளான மக்கள் பேருந்துக்காக நிறுத்தத்தில் காத்துக் கொண்டு இருந்து உள்ளனர். அப்போது அந்த வழியாக சென்ற தனியார் பேருந்து திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடத் தொடங்கியது.
தனியார் பேருந்தின் வேகத்தை ஓட்டுநரால் கட்டுப்படுத்த முடியாத நிலையில், தறிகெட்டு ஓடிய பேருந்து சாலையில் நின்று கொண்டு இருந்த அரசுப்பேருந்து மீது பலமாக மோதியது. தனியார் பேருந்து மோதிய வேகத்தில், நகர்ந்த அரசுப்பேருந்து, நிறுத்தத்தில் காத்திருந்த மக்கள் மீது ஏறிச்சென்றது.
இந்த கோர விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். இந்தச் சமபவம் தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஏறத்தாழ 12-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விபத்தில் படுகாயம் அடைந்ததாக கூறப்பட்டு உள்ளது.
தனியார் சொகுசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வந்து மோதிய வேகத்தில் அரசுப்பேருந்து அப்பளம் போல் நொறுங்கியது. விபத்தில் சிக்கி உயிரிழந்த 10 பேரின் உடலை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.